ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். தினமும் வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றிலிருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் எடுத்து வருவார். அவற்றில் ஒரு பானையில் சிறு ஓட்டை இருந்தது. எனவே அந்தப் பானையில் எடுத்து வருவதில் பாதித் தண்ணீர், வீடு வருவதற்குள் வழியெங்கும் ஒழுகிவிடும். மற்றொரு பானையில் இருக்கும் நீர் முழுமையாகப் பயன்படும். இதை தினமும் பார்த்து வேதனைப்பட்ட ஓட்டைப் பானை ஒரு நாள் தாழ்வு மனப்பான்மையில், ‘‘ஐயா, என்னால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை’’ என்று விவசாயியிடம் சொல்லி அழுததாம். விவசாயி சிரித்துக்கொண்டே, ‘‘நாம் தினமும் வரும் பாதையை நீ கவனித்தாயா... வழிநெடுக உன்னைச் சுமந்துவந்த பக்கம் மட்டும் செடிகளை நட்டு வைத்தேன். அவற்றில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்தாயா? அதேநேரத்தில் எதிர்ப்பக்கத்தில் பூக்கள் இல்லை என்பதையும் கவனித்துப் பார்’’ என்று சொன்னாராம்.
அப்போதுதான் அந்த ஓட்டைப் பானைக்குப் புரிந்தது. தன்னில் இருந்து சிந்திய நீர் வீணாகவில்லை. செடிகளைச் செழிக்கவைத்துப் பூக்கள் மலர உதவியிருக்கிறது. ‘இயற்கையில் எதுவும் தாழ்வானதல்ல; எல்லாம் பயனுள்ளவைதான்‘ என்னும் ரகசியம் அதற்குப் புரிந்தது.
இங்கு பலரும் இப்படித்தான் தங்கள் செயல்களின் பயனை உணராமல் இப்படித் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார்கள். இந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், எவரையும் முன்னேறவிடாமல் முடக்கிப்போடும்.