`நல்லவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். ஆனால், கெட்டவர்கள் சுகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாக நடக்கிறது. ஏன் இப்படி இருக்கிறது குருஜி?'
என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி இது. உங்களுக்குள்ளும் அந்தக் கேள்வி இருக்கலாம். ஒரு ரகசியம் சொல்கிறேன். இயற்கையில் நல்லவன், கெட்டவன் என்ற பேதமே இல்லை. உண்மையானவன், பொய்யானவன் என்றுதான் உள்ளது. ‘நல்லவனாக இரு' என்று வாழும் வழி சொல்கிறார்களே தவிர ‘உண்மையாக இரு’ என்று யாரும் சொல்லவேயில்லை.
குழந்தைகள் எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள். நம் வீட்டில் எப்படி விளையாடி சேட்டை செய்து சந்தோஷமாக இருப்பார்களோ, அப்படித்தான் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் இருப்பார்கள். ஆனால் நாம் அதை அனுமதிப்பதில்லை. ‘இப்படியெல்லாம் சேட்டை பண்ணக்கூடாது. இதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்... பேசாமல் இரு' என்று கட்டுப்படுத்துவோம்.