‘உங்களின் அத்தனை கவலைகளையும் ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வாருங்கள்' என்று எல்லோரிடமும் சொன்னால், அவர்கள் எடுத்து வரும் மூட்டையில் மிகப்பெரிய சுமையாக ‘பணக்கவலை'தான் இருக்கும். காரணம், பலருக்கும் எப்போதும் பணம் குறித்த கவலை இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவர் இருவருக்கல்ல, உலகத்தில் இருக்கிற பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்னை இது.
‘‘குருஜி, பணம் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடவே முடியாதா?'' என்று என்னிடம் பலர் கேட்பதுண்டு. இது சாதாரண கேள்விபோல் தோன்றினாலும் மிகுந்த அர்த்தம் பொருந்திய கேள்வி. இந்த உலகில் வாழ்வதற்குப் பணம் முக்கியம். அதில் சந்தேகமே இல்லை. அதைச் சம்பாதிக்கவே ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஏற்கெனவே இதுகுறித்துப் பேசியிருக்கிறோம். செல்வம் ஏன் அதை வைத்திருப்பவர்களிடமே அதிகம் சென்று சேர்கிறது என்ற பிரபஞ்ச ரகசியத்தை விளக்கியிருக்கிறேன்.